கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அதிகாரிகளின் கவனக்குறைவால் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயபுரம் பகுதியில் நடைபெற்று வரும் உத்திரம் தேர் திருவிழாவையொட்டி, மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் தமிழரசன் என்ற ஒப்பந்தத் தொழிலாளி ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். தற்போது அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்தது எப்படி? மின் விபத்து நேர்ந்த பகுதியில் மின்சாரத்தைத் துண்டிப்பதில் ஏற்பட்ட குளறுபடியே இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட மின் பாதையை அணைப்பதற்குப் பதிலாக, தவறாக வேறொரு பாதையை அணைத்துவிட்டு பணியைத் தொடருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதே தமிழரசன் காயமடைய முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
மேலும், பணியின் போது மின்வாரியம் வலியுறுத்தும் ‘எர்த் ராட்’ (Earth Rod) உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஆண்டில் இதே கோட்டத்தில் நடைபெறும் இரண்டாவது விபத்து இது என்பதால், ஊழியர்களிடையே அச்சமும் ஆத்திரமும் எழுந்துள்ளது.
CITU வலியுறுத்தல்: இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மத்திய அமைப்பு (CITU) கள்ளக்குறிச்சி கிளை சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது
