திண்டுக்கல்லில் ‘பட்டி’ அரசியல்? வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து – திமுக-அதிமுக இடையே மோதல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலையடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டம் மற்றும் கோயில் வளாகத்தில், பொதுமக்களைத் திரட்டி திமுகவினர் பிரியாணி விருந்து அளித்ததாக எழுந்த புகாரால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
நூற்றுக்கணக்கானோர் அடைத்து வைப்பா? நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் தரப்பில், நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் பேருந்து மற்றும் வேன்கள் மூலம் சிறுமலை மலை மாதா கோயில் பகுதிக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதோடு, தலா 500 ரூபாய் பணம் கொடுத்து மாலை வரை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிமுக – திமுக நேரடி மோதல்: தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிமுகவினர், திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. “அதிமுக வேட்பாளர் விஸ்வநாதனின் பிரச்சாரத்திற்கு மக்கள் கூட்டம் செல்வதைத் தடுக்கவே, திட்டமிட்டு வாக்காளர்களை இங்கு வரவழைத்து திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர்” என அதிமுக உறுப்பினர்கள் சாடினர். மேலும், இந்தத் தகவலை கசியவிட்டதாகக் கூறி அங்கிருந்த கோயில் அர்ச்சகரையும் திமுகவினர் மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.
தேர்தல் பறக்கும் படை அதிரடி: தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை மீட்ட அதிகாரிகள், அவர்களை வந்த வாகனங்களிலேயே பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். கடந்த காலங்களில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நடந்த ‘பட்டி’ முறையிலான வாக்காளர் கவனிப்பு தற்போது திண்டுக்கல்லிலும் அரங்கேறியுள்ளது வேட்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
