மகளைக் கண்டிக்க அழைத்துச் சென்றபோது விபரீதம் – சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய கொலையாளி.
தெலங்கானா: தெலங்கானா மாநிலம் மேட்சல் மால்காஜ்கிரி மாவட்டத்தில், ஓடும் பைக்கிலேயே மாமியாரைத் தாக்கி கொலை செய்த மருமகனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி: செங்கிசெர்லா பகுதியைச் சேர்ந்த அருணா (39) என்பவரின் மகள் காவ்யா (19). இவர் ஸ்நேஹித் (28) என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஸ்நேஹித் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். சமீபகாலமாகத் தம்பதியிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் என்ன? கடந்த ஏப்ரல் 29-ம் தேதி, தனது மனைவி அடிக்கடி கோபப்படுவதாகவும், அவருக்கு அறிவுரை கூறுமாறும் ஸ்நேஹித் தனது மாமியாரிடம் பேசியுள்ளார். மறுநாள் மதியம், கடைக்குச் சென்ற அருணாவைத் தனது பைக்கில் ஏற்றிச் சென்ற ஸ்நேஹித், சிறிது நேரத்திலேயே காவ்யாவிற்கு போன் செய்துள்ளார். அப்போது, அருணாவிற்கு வலிப்பு வந்து கீழே விழுந்துவிட்டதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உண்மையை வெளிச்சமிட்ட சிசிடிவி: மருத்துவமனைக்குச் சென்ற காவ்யா, தனது தாய் ரத்தக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஓடும் பைக்கில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதும், ஆத்திரமடைந்த ஸ்நேஹித் தனது தலையில் இருந்த ஹெல்மெட்டை கழற்றி அருணாவைத் தாக்கியதும் தெரியவந்தது.
இதில் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த அருணா, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார். கொலையை ஒப்புக்கொண்ட ஸ்நேஹித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
