ஈரானிடம் கைதியாக இருப்பதே பாதுகாப்பு:

ஈரான் வான்பரப்பிற்குள் அத்துமீறிய அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாயமான அமெரிக்க விமானியின் தாயார் வெளியிட்ட உருக்கமான பதிவிற்கு, ஈரான் தூதரகம் அளித்துள்ள பதில் தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்தில் ஈரான் எல்லையில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் ஒரு விமானி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மற்றொரு விமானியை மீட்கும் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், மாயமான விமானியின் தாயார் தனது மகனின் நிலை குறித்து ‘X’ தளத்தில் கவலை தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதரகம், “உங்கள் மகன் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம் இருப்பதை விட, ஈரானிடம் கைதியாக இருப்பதே அவருக்கு அதிக பாதுகாப்பு. கைதிகளை எப்படிக் கண்ணியமாக நடத்த வேண்டும் என்பது ஈரானுக்குத் தெரியும். அமெரிக்க மீட்புக் குழுவிடம் சிக்குவதை விட எங்களிடம் இருப்பதே சிறந்தது என உங்கள் மகன் பிரார்த்தனை செய்யட்டும்,” எனப் பதிவிட்டுள்ளது.

மேலும், தென் ஆப்பிரிக்காவிற்கான ஈரான் தூதரகம் தனது பதிவில், “மனிதநேயச் சட்டங்கள் உருவாவதற்கு முன்பே கைதிகளின் உரிமைகளை மதித்த நாகரிகம் எங்களுடையது. அமெரிக்காவைப் போல நாங்கள் கற்காலத்தில் இல்லை,” எனச் சாடியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நீடிக்கும் இந்த மோதலில் இதுவரை 1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here