Monday, August 31, 2026
Homeஉலகம்கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது குற்றமல்ல! உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் முக்கியக்...

கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது குற்றமல்ல! உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் முக்கியக் கருத்து!

கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது குற்றமல்ல! உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் முக்கியக் கருத்து!

 

போபால்: ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் அமைதியான போராட்டங்களைக் குற்றங்களாகப் பார்க்கும் போக்கு அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலை தெரிவித்துள்ளார். கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக இளைஞர்களைச் சிறையில் அடைத்தது குறித்துப் பேசிய அவர், அது சட்டப்படி குற்றமல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய சட்டப் பல்கலைக்கழக சொற்பொழிவு:

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜி.பி. சிங் நினைவாக 4-வது நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி விஷால் தகாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அப்போது ‘ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம்’ என்ற தலைப்பில் நீதிபதி உஜ்ஜல் புயான் உரையாற்றினார்.

“3 மாத சிறைத்தண்டனை சாத்தியமா?” – நீதிபதி கேள்வி:

உரையின் போது வாரணாசி கங்கை நதியில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் சுட்டிக்காட்டி நீதிபதி புயான் பேசியதாவது:

“வாரணாசியில் கங்கை நதியில் படகில் இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்து, சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறி 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதைத் தடை செய்ய எந்தச் சட்டமும் இல்லை; அது குற்றமும் அல்ல. தவறே செய்யாத சூழலில் அத்தகைய செயலுக்காக ஒருவரை 3 மாதங்கள் சிறையில் அடைப்பதும், அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுவதும் எவ்வாறு சாத்தியமாகும்?”

இளைஞர்கள் மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல், பகைமையை வளர்த்தல் மற்றும் நீர் மாசு தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.

ஜனநாயகத்தின் உயிர்நாடி விவாதங்களே:

தொடர்ந்து பேசிய நீதிபதி உஜ்ஜல் புயான்:

  • மாணவர்கள் மீது நடவடிக்கை படக்கூடாது: சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் கேள்விகளைக் கேட்கக்கூடிய ஆரோக்கியமான சூழல் உருவாக்கப்பட வேண்டும். மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்ததற்காக மட்டுமே மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது.

  • ஜாமீன் நிபந்தனைகள்: அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கும்போது, அவர்கள் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கக் கூடாது அல்லது பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது என அநியாயமான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

  • ஜனநாயகத்தின் வலிமை: விவாதங்களும் மாறுபட்ட கருத்துக்களுமே ஜனநாயகத்தின் உயிர்நாடி. ஆனால், தற்காலத்தில் மிகவும் சாதாரணமான செயல்கள் கூடக் குற்றங்களாகப் பார்க்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாட்டின் இளைஞர்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தனது உரையில் விரிவாகக் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments