என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார்: பெயர் குறிப்பிடாமல் நடிகை குறித்து ரவி மோகன் ஆவேசம்!
சென்னை: திரையுலகில் 23 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் வெற்றிகளைத் தந்து வரும் நடிகர் ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அவமானங்கள் மற்றும் இணையவழித் தாக்குதல்கள் (Cyberbullying) குறித்து முதன்முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்துப் பேசியுள்ளார்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது!
இத்தனை காலம் தான் அமைதியாக இருந்தது முட்டாள்தனம் என்று குறிப்பிட்டுள்ள ரவி மோகன், “நான் எப்போதும் விட்டுக்கொடுத்துப் போகும் குணம் கொண்டவன். ஆனால், சாது மிரண்டால் காடு கொள்ளாது. என்னை மறைமுகமாகத் தாக்கி, எரிச்சலூட்ட நினைக்கிறார்கள். தைரியம் இருந்தால் என் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து என்னை எதிர்கொள்ளுங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.
திரைத்துறையில் இருந்து தற்காலிக விலகல்?
தனக்கு ஏற்பட்டுள்ள தேவையற்ற அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று வருத்தப்பட்ட அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களும், இணையவழித் தொல்லைகளும் சரியாகும் வரை தான் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், தனது படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகள் இரவும் பகலும் உழைத்து, 95 சதவீத வெற்றிகளைத் தந்துள்ள தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதை எண்ணிக் கவலை தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளைப் பார்க்க அனுமதி இல்லை
தனது திருமண வாழ்க்கையின் தொடக்கத்தில் தங்களுக்குள் இருந்த அன்யோன்யம் குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள கசப்பான சூழல் குறித்தும் அவர் பேசியுள்ளார். “நான் அவரோடு வாழ்ந்தபோது பல நேர்காணல்களில் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசினார், அப்போது அவருக்குப் பெண்ணியம் தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது குழந்தைகளைப் பார்ப்பதற்குக் கூடத் தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் செல்ல மெய்க்காப்பாளர்கள் (Bodyguards) அனுப்பப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
‘மூன்று எழுத்து’ நடிகை மீது சாடல்
தனது குடும்பப் பிரச்சினைக்குக் காரணமான ஒரு குறிப்பிட்ட ‘மூன்று எழுத்து’ நடிகையின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் சாடியுள்ள ரவி மோகன், “அந்த நடிகை என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என்னைப்பற்றிப் பேசுவதற்கு அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஒரு பெண் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி அவர் தப்பித்துக் கொள்கிறார்” என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.
தனது பெற்றோர் மற்றும் சகோதரர் தான் தனக்கு எல்லாமே என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது குடும்பத்தைப் பற்றித் தவறாகப் பேசினால் சும்மா இருக்க மாட்டேன் என்றும் தனது இறுதி எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளார்.
