அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சீறிப்பாயும் வெள்ளம்! 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை!
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே, தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள உலகப்புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வேண்டாமென வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் எச்சரித்துள்ளது.
\
சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை & எச்சரிக்கை: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவில் திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக மலையோரப் பாதைகளில் நிலச்சரிவு ஏற்படுவதுடன், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வால்பாறை வழியாகச் செல்லும் பயணிகள் தங்களது பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செல்ஃபி மோகத்தால் ஆபத்து – இளைஞரை மீட்ட ராணுவ வீரர்: நீர்வீழ்ச்சி மற்றும் சாலக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில், தடையை மீறி ஆபத்தான பகுதிக்குச் சென்று செல்ஃபி எடுக்க முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவர் நடுஆற்றில் இருந்த பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார்.
இதனைக் கண்ட அங்கிருந்த ராணுவ வீரர் ஒருவர், உள்ளூர் மக்களின் உதவியுடன் கயிற்றைக் கட்டி ஆக்ரோஷமாகப் பாய்ந்த நீரில் இறங்கி, மரணப் போராட்டத்தில் இருந்த இளைஞரைப் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தார்.
ஆபத்தான பகுதி – எச்சரிக்கும் அதிகாரிகள்: ‘புன்னகை மன்னன்’, ‘இருவர்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் படமாக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி அழகானது என்றாலும், பாறைகள் வழுக்கும் தன்மையுடனும் ஆபத்தான நீர்ச்சுழல்களுடனும் கூடியது. எனவே வெள்ளப்பெருக்கு காலங்களில் பொதுமக்கள் உயிர் ஆபத்தை உணர்ந்து அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
