2029-ல் பூமிக்கு அருகில் வரும் ‘குழப்பத்தின் கடவுள்’ சிறுகோள்! ஆபத்தா? – நாசா விளக்கம்.
விண்வெளி: விண்வெளி ஆராய்ச்சியில் 2029-ம் ஆண்டு ஒரு மிக முக்கியமான ஆண்டாகக் கருதப்படுகிறது. சுமார் 20 மில்லியன் டன் எடை கொண்ட ‘அப்போஃபிஸ்’ (Apophis) என்ற பிரம்மாண்ட சிறுகோள், பூமியை மிக நெருக்கமான தொலைவில் கடந்து செல்லவுள்ளது. ‘குழப்பத்தின் கடவுள்’ (God of Chaos) என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் குறித்து நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் இதோ.
அப்போஃபிஸ் – ஒரு அறிமுகம்: சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலம் உருவான போதே தோன்றிய இந்த சிறுகோள், ஈபிள் கோபுரத்தை விடப் பெரியது. பண்டைய எகிப்திய புராணங்களில் வரும் ‘அப்பெப்’ என்ற பாம்பின் பெயரே இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. இது 2004-ம் ஆண்டு வானியலாளர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வளவு அருகில் வரும்? வரும் 2029 ஏப்ரல் 13-ம் தேதி, அப்போஃபிஸ் பூமியிலிருந்து சுமார் 32,000 கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாம் பயன்படுத்தும் ஜிபிஎஸ் மற்றும் டிவி செயற்கைக்கோள்கள் (35,786 கி.மீ) இருக்கும் உயரத்தை விடக் குறைவான உயரத்தில் இது கடக்கவுள்ளது. இதனால், பெரிய தொலைநோக்கிகள் இன்றி வெறும் கண்ணாலேயே இதைப் பார்க்க முடியும். குறிப்பாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் இது தெளிவாகத் தெரியும்.
பூமிக்கு ஆபத்தா? தொடக்கத்தில் இது பூமியைத் தாக்க 2.7% வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், 2021-ல் நாசா மேற்கொண்ட தீவிர ஆய்வுகளுக்குப் பிறகு, “அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்த சிறுகோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இந்தச் சிறுகோளின் மேற்பரப்பில் நிலச்சரிவுகள் ஏற்படலாம் அல்லது அதன் சுழற்சி வேகம் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



