தூத்துக்குடி: நண்பனை வெட்டிக்கொல்ல முயற்சி – இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவரைத் திட்டமிட்டு கொலை செய்ய முயன்ற வழக்கில், கார்த்திக் என்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நட்பில் விரிசல்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நா.முத்தியாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். கார்த்திக்கிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அதனைப் பிடிக்காத அந்த மாணவர் அவரிடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். மேலும், கார்த்திக்கின் தொலைபேசி எண்ணையும் தனது செல்போனில் பிளாக் (Block) செய்துள்ளார்.
கொலை முயற்சி: தன்னைத் தவிர்ப்பதால் ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி அந்த மாணவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “என்னிடம் பேசாத நீ உயிரோடு இருக்கக் கூடாது” என்று கூறி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவனின் கழுத்தில் இரண்டு முறை வெட்டிவிட்டுத் தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த மாணவர் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு: இந்தச் சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கைக் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லாம்மாள் முன்வைத்த வாதங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி முருகன், கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கொலை முயற்சி மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கார்த்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.



