சோளிங்கரில் நிருபர்கள் மீது தாக்குதல்! தவெக எம்.எல்.ஏ கும்பல் மீது குற்றச்சாட்டு – பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர் / சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்திப் பத்திரிகையாளர்களை அறையில் அடைத்து வைத்துத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்தின் பின்னணி:
சோளிங்கரில் உள்ள திரையரங்கு ஒன்றில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டபோது, அங்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த (TVK) சோளிங்கர் எம்.எல்.ஏ கபில், படம் குறித்து ‘ரிவ்யூ’ கேட்டுக்கொண்டிருந்த சிவா என்ற யூடியூபரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.
இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திரையரங்கின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, அங்கு வந்த நிருபர்கள் மற்றும் யூடியூபர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளனர்.
நிருபர்கள் மீது தாக்குதல் & வீடியோக்கள் அழிப்பு:
நேற்று இரவு சோளிங்கர் அண்ணா சிலை அருகே உள்ள யூடியூபர் சிவாவின் வீட்டிற்குச் சென்ற எம்.எல்.ஏ கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், சிவாவை வலுக்கட்டயமாக அருகே இருந்த ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தை வெளியே இருந்து செல்போனில் வீடியோ எடுத்த தினகரன் நிருபர் அரங்கநாதன் (50) மற்றும் தினமலர் நிருபர் கல்யாணசுந்தரம் (70) ஆகிய இருவரையும் 20-க்கும் மேற்பட்ட கும்பல் சுற்றி வளைத்து, ஸ்டூடியோ கடைக்குள் தள்ளி ஷட்டரை மூடியுள்ளது. பின்னர் இருவரையும் சரமாரியாகத் தாக்கி, செல்போன்களைப் பறித்து வீடியோக்களை அழிக்குமாறு மிரட்டியுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் (SI) முனீர் பாஷா முன்னிலையில், நிருபர்கள் எடுத்த வீடியோக்கள் வலுக்கட்டயமாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.
பொதுமக்கள் போராட்டம் & வழக்குப்பதிவு:
காயமடைந்த அரங்கநாதன், கல்யாணசுந்தரம் மற்றும் சிவா ஆகிய மூவரும் உடனடியாகச் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், தப்பியோடிய எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்களும் பொதுமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. காயமடைந்த மூவரும் அளித்துள்ள தனித்தனி புகார்களின் அடிப்படையில் சோளிங்கர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
