கரூர் அருகே பரபரப்பு: விவசாயி மீது துப்பாக்கிச் சூடு – முதுகில் 10 குண்டுகள் பாய்ந்த நிலையில் தீவிர சிகிச்சை!
கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் அருகே காப்பு வனப்பகுதியையொட்டிச் சென்ற விவசாயி மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 குண்டுகள் உடலில் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்:
கடவூர் அடுத்த வங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கருணகிரி (40). இவருக்கு அப்பகுதியில் சொந்தமாகத் தோட்டம் உள்ளது. நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், தோட்டத்தில் தங்கியிருக்கும் தனது மாமாவிற்கு உணவு கொடுப்பதற்காகக் கருணகிரி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவர் தனது வீட்டின் அருகே உள்ள காப்பு வனப்பகுதியைக் கடந்து சென்றபோது, இருட்டிற்குள் மறைந்திருந்த யாரோ ஒரு நபர் திடீரென கருணகிரியைப் பின்னாலிருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அடுத்தடுத்து 10 குண்டுகள் (பல்ரஸ் தோட்டாக்கள்) அவரது முதுகில் பாய்ந்தன.
மருத்துவமனையில் அனுமதி:
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான கருணகிரி, வலியால் துடித்துக் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்துடன் சாலையின் நடுவே விழுந்து தத்தளித்தார். அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக பாலவிடுதி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கருணகிரியை மீட்டுத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசரக் கால அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, முதுகில் பாய்ந்திருந்த 10 தோட்டாக்களும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.
வேட்டையா? அல்லது கொலையா? – போலீஸ் விசாரணை:
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அகற்றப்பட்ட தோட்டாக்கள் நாட்டுத் துப்பாக்கிகளில் விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவிலான ‘பல்ரஸ் தோட்டாக்கள்’ என்பது தெரியவந்துள்ளது. இந்த வகை துப்பாக்கிகளில் இருந்து ஒரே பிரஸ்ஸில் 10-க்கும் மேற்பட்ட சிறிய தோட்டாக்கள் சிதறிப் பாயும் தன்மை கொண்டவை.
காப்பு வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற கும்பல், இருட்டில் அடையாளம் தெரியாமல் தற்செயலாகக் கருணகிரி மீது சுட்டதா? அல்லது தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக அவரைக் கொலை செய்யும் நோக்கில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? என்ற கோணங்களில் பாலவிடுதி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கரூர் மற்றும் திண்டுக்கல் எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



