நாம் அஞ்சியது நடந்துவிட்டது’.. ஓசூர் ராணுவ விமானத் திட்டம் கைநழுவியது குறித்து சி. ஜோசப் விஜய்க்கு டி.ஆர்.பி. ராஜா அவசரக் கடிதம்!
ஓசூர்: தமிழ்நாட்டின் ஓசூர் பகுதிக்கு வரவிருந்த சுமார் ₹15,000 கோடி மதிப்பிலான இந்தியாவின் அதிநவீன ‘ஏம்கா’ (AMCA) போர் விமானப் பரிசோதனை மையத் திட்டம், தற்போது ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்குத் தமிழக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
“இதனை நாம் அனுமதித்திருக்கக் கூடாது”
இது குறித்து டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “நாம் அஞ்சியது நடந்துவிட்டது! இதனை நாம் ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது” எனத் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது:
“ஆந்திரப் பிரதேசத்தை விடத் தொழில்நுட்ப ரீதியாகவும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் நம் தமிழ்நாடு மிகச் சிறந்த இடத்தை வழங்கியிருந்த போதிலும், இந்த மாபெரும் திட்டத்தை நாம் இழந்துவிட்டோம். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், கடந்த 3 ஆண்டுகளாக டிஆர்டிஓ (DRDO) அதிகாரிகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இதற்காக 100 ஏக்கர் நிலத்தை முற்றிலும் இலவசமாக வழங்கத் தமிழக அரசு முன்வந்ததுடன், ஓசூர் விமான நிலையத்தில் 3.5 கி.மீ நீளமுள்ள ஓடுபாதை அமைக்கவும் திட்டமிட்டிருந்தோம்.”
அரசியல் காரணங்களால் அநீதி?
இந்தத் திட்டம் திடீரென ஆந்திராவின் புட்டபர்த்திக்கு மாற்றப்பட்டதன் பின்னணியில் ‘அரசியல் காரணங்கள்’ இருப்பதாகச் செய்திகள் வெளியாவதைச் சுட்டிக்காட்டிய அவர், தேசியப் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான ராணுவ முதலீடுகளை அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் முடிவு செய்வது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி என்று சாடியுள்ளார்.
“மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் தமிழ்நாடு கொள்கைத் தொடர்ச்சிக்குப் பெயர் பெற்ற ஒரு மாநிலம். இத்தகைய முக்கியத் திட்டங்களுக்கு ஆட்சி மாற்றம் ஒரு தடையாக இருக்கக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய்க்கு அவசர வேண்டுகோள்
இந்த இக்கட்டான சூழலில், தற்போதைய தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாகவும் தனிப்பட்ட முறையிலும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று டி.ஆர்.பி. ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் புவியியல் இருப்பிடம், மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்புச் சாதகங்களைப் பட்டியலிட்டுப் பிரதமர் அலுவலகத்திற்கும் (PMO), பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் முதலமைச்சர் விஜய் உடனடியாகக் கடிதம் எழுத வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய மூலோபாய முதலீட்டிற்காக இறுதிவரைப் போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



