இதுதான் பெண்கள் பாதுகாப்பா? “அவர் என்னை வாழ விடமாட்டார்” – அனிஷா எடுத்த தீவிர முடிவு; டிவிகே (TVK) நிர்வாகி அதிரடி கைது!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, இளம் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக டிவிகே (TVK) நிர்வாகி ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த டிவிகே நிர்வாகியான சங்கர் அப்பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மனமுடைந்த அப்பெண், “அவர் என்னை வாழ விடமாட்டார். குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் செல்கிறேன்” என்று கணவருக்குக் குறுஞ்செய்தி (Text message) அனுப்பிவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்த மகேஷ் – அனிஷா தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மகேஷ் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், அனிஷா தனியார் பள்ளியொன்றில் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த டிவிகே நிர்வாகி சங்கர், அனிஷா வேலைக்குச் சென்று வரும் வழியில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து அனிஷா தனது கணவரிடம் தொலைபேசியில் கூறி வேதனைப்பட்டுள்ளார். மகேஷ் ஊருக்குத் திரும்பியதும் நடவடிக்கை எடுக்கலாம் என ஆறுதல் கூறியபோதிலும், சங்கரின் தொல்லை அதிகரித்ததால் அனிஷா இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளார்.
எஸ்பி அலுவலகத்தில் புகார் – டிவிகே நிர்வாகி கைது: சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மகேஷ் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) நேரடியாகப் புகார் அளித்தார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், குலசேகரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட டிவிகே நிர்வாகி சங்கரைக் கைது செய்தனர். அனிஷா அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
