திருக்கோவிலூர் பெரிய ஏரி – தெப்பக்குள பாதாள கால்வாய் சீரமைப்பு: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாள நீர்வழிப்பாதையைச் சீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ள கோயில் நிர்வாகத்திற்கும், ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்திற்கும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளது
பண்டைய நீர் மேலாண்மைப் பொக்கிஷம்:
108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில், பழமையான வைணவப் பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலைக்குக் பெயர்பெற்றது. இக்கோயிலின் தெப்பத்திருவிழா தடையின்றி நடைபெறவும், நீர் வளத்தைச் சீராகப் பராமரிக்கவும் அந்நாட்களிலேயே பெரிய ஏரியிலிருந்து தெப்பக்குளத்திற்குச் செல்லும் வகையில் நிலத்தடி பாதாளக் கால்வாய் அமைக்கப்பட்டது.
பராமரிப்பின்றி முடங்கிக் கிடந்த இந்தப் பண்டைய பொறியியல் அதிசயத்திற்கு தற்போது சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) தொழில்நுட்ப உதவியுடன் புத்துயிர் அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை:
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ஏ. ஃபசல் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“வரலாற்றுச் சிறப்புமிக்க நிலத்தடி நீர் வழியை அறிவியல் பூர்வமாகப் புனரமைக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து, தெப்பத் திருவிழாவிற்கான இயற்கை நீர் ஓட்டத்தை மீட்டெடுக்க வேண்டும்.
மேலும், திருக்கோவிலூர் பெருங்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாரம்பரியக் கால்வாய்கள், நீர்நிலைகளை முழுமையாகக் கணக்கெடுத்துப் பாதுகாக்கத் தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இத்தகைய பாரம்பரியப் பாதுகாப்புப் பணிகள் திருக்கோவிலூரின் பெருமையை மீட்டெடுப்பதுடன், வருங்கால தலைமுறைக்குச் சிறந்த முன்மாதிரியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
