முதல்வர் விஜயிடம் தீர்வு கோரும் ஜவுளித்துறையினர்!
தமிழகத்தின் மிக முக்கியமான ஜவுளி மற்றும் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாகத் திகழும் கரூர் பிராந்தியம், தற்போது இதுவரை இல்லாத அளவிலான கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஜவுளிப் பொருட்களின் உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், பெரும்பாலான உற்பத்தி அலகுகள் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல்கள் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தமிழக ஜவுளித்துறையை மறைமுகமாகப் பெரும் பேரிடிக்கு உள்ளாக்கியுள்ளது என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பால், ஆடை உற்பத்தியில் பயன்படும் பாலியஸ்டர், சாயங்கள், ஜவுளி ரசாயனங்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலைகள் 30% முதல் 60% வரை விண்ணைத் தொட்டுள்ளன.
இதுமட்டுமன்றி, அடிப்படை மூலப்பொருளான பருத்தி நூலின் விலை உள்நாட்டில் 40% வரை உயர்ந்துள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து தாமதத்தால் சாயம் பூசுதல், அச்சிடுதல் போன்ற பணிகளுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. ஆனால், உற்பத்திச் செலவு உயர்ந்த அளவிற்குப் பன்னாட்டுச் சந்தையில் கூடுதல் தொகையைத் தர விற்பனையாளர்கள் மறுப்பதால், கரூரின் ஜவுளி உற்பத்திப் பணிகள் முடங்கியுள்ளன.
மத்திய அரசு நூல் விலையைக் கட்டுப்படுத்தத் தவறிய நிலையில், தமிழகத்தில் தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான மாநில அரசு, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தகுந்த உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் கரூர் ஜவுளித்துறையையும் பாதுகாக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



