“மாத்திரையைத் தூளாக்க 500 ரூபாய் நோட்டு எதுக்கு?” – சரத்குமார் மற்றும் விஜய்யை ஒரே மேடையில் வெளுத்து வாங்கிய சீமான்!

சென்னை: சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் இணைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சரத்குமார் மற்றும் டிவிகே தலைவர் விஜய்யை நோக்கிய பல்வேறு கேள்விகளை முன்வைத்துக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.
சரத்குமாருக்கு சரமாரி கேள்விகள்: அமைச்சர் சரத்குமாரைக் கடுமையாக விமரித்துப் பேசிய சீமான், “உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஐபிஎல் (IPL) போட்டிக்கு அழைத்துச் செல்வதுதான் ஒரு நல்ல தந்தையின் லட்சணமா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய குழந்தைக்குப் போட்டியில் வைத்து மாத்திரையைத் தூளாக்கிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கு எதற்கு 500 ரூபாய் நோட்டைப் பயன்படுத்த வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் கொடுப்பது தீர்வாகாது என்றும், கால்நடை வளர்ப்பு, விவசாயம் உள்ளிட்ட தொழில்களை அரசுப் பணிகளாக அங்கீகரிப்பதே உண்மையான தீர்வாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குக் கண்டனம்: தொடர்ந்து விஜய் குறித்துப் பேசிய சீமான், “தேர்தலில் பெரம்பூரில் மதத்தையும், திருச்சி கிழக்கில் சாதியையும் முன்னிறுத்திப் போட்டியிட்டுவிட்டு, இப்போது சாதி, மதத்திற்கு எதிராகப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. சினிமாவில் வராத ‘ஜோசப்’ என்ற பெயர் அரசியலுக்கு வந்த பிறகு ஏன் வெளிவருகிறது?” எனக் சாடினார்.
தனது சொகுசு கார் சர்ச்சை குறித்து விளக்கமளித்த அவர், “கட்சி நிதியிலிருந்து ஒரு கப் தேநீர் கூட நான் அருந்தியதில்லை; என் மீது கொண்ட அன்பால் என் மருமகன் வாங்கிக் கொடுத்த காரைப் பற்றிப் பேசுபவர்கள், நான் வாங்குவதை மட்டும் ஏன் சகித்துக் கொள்ள முடியவில்லை?” என ஆவேசமாகப் பதிலளித்தார்.



