எரிபொருள் விலை உயர்வு: நாடு முழுவதும் ஸ்விக்கி, ஸோமேட்டோ ஊழியர்கள் இன்று அதிரடி வேலைநிறுத்தம்!
சென்னை: மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்குச் சுமார் ₹3 வரை உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு ஏற்பத் தங்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும் நாடு முழுவதும் உள்ள ஆன்லைன் உணவு விநியோக (Delivery Partners) ஊழியர்கள் இன்று தற்காலிக வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
செயலிகளை முடக்க அழைப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நீண்ட நேரம் உழைத்தும் தங்களுக்குப் போதுமான வருமானம் கிடைப்பதில்லை என விநியோக ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்துத் தற்காலிக மற்றும் தள சேவைகள் தொழிலாளர் சங்கம் (GIPSWU) தங்களது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் அதற்கேற்பப் போதிய ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, இந்தியா முழுவதும் உள்ள தற்காலிக மற்றும் தள சேவைகள் தொழிலாளர்கள் (Gig Workers) இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது செயலி (App) அடிப்படையிலான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி, தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.”
தற்போதைய எரிபொருள் நிலவரம்
எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலை உயர்விற்குப் பிறகு, சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.47-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திடீர் விலையேற்றம் தங்களின் தினசரிப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டாக்சி ஓட்டுநர்களும் பாதிப்பு
இந்த எரிபொருள் விலை உயர்வால் ஆன்லைன் உணவு விநியோக ஊழியர்கள் மட்டுமின்றி, ஓலா, உபெர் போன்ற ஆன்லைன் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் தினசரி வருமானத்தில் பெரும்பகுதி எரிபொருள் செலவிற்கே சென்றுவிடுவதாகவும், தற்போதைய விலை உயர்வுக்கு ஏற்பச் செயலி நிறுவனங்கள் தங்களுக்கான பயணக் கட்டணங்களை (Fares) உயர்த்தவில்லை என்றும் ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் நடைபெறவுள்ள இந்த 5 மணி நேரத் தற்காலிக வேலைநிறுத்தப் போராட்டத்தால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆன்லைன் உணவு விநியோகம் மற்றும் வாகனச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.



