சென்னை: “இந்தக் கார்ப்பரேட் காலகட்டத்தில் தமிழ் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை, தமிழ் படித்தால் வேலை கிடைக்காது” என்று ஆணவத்தோடு இழிவுபடுத்துபவர்களுக்கு, இந்த ஆண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ-மாணவிகள் தங்களது சாதனை மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் சாபக்கேடு
இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் தாய்மொழியை ஒரு மொழிப் பாடமாகக் கூடப் படிக்காமல், பள்ளி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து முடித்துவிடக்கூடிய ஒரு விசித்திரமான சூழல் தமிழ்நாட்டில் மட்டுமே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க அரசு முயன்றபோது, “அது குழந்தைகளுக்குக் கூடுதல் சுமை” எனக் கூறி, இங்குக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் பிற மாநிலத்தவர் நீதிமன்றம் சென்று தடை வாங்கிய அவலமும் இங்கு அரங்கேறியுள்ளது.
ஆனால், அத்தகைய தடைகளையும் இழிவுரைகளையும் உடைத்தெறிந்து காட்டியுள்ளது தமிழ்ப் பிள்ளைகளின் உழைப்பு.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழிப் பொறியியல் சாதனை!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாகக் கட்டடப் பொறியியல் (B.E. Civil Engineering) பாடம் தமிழ்வழியில் கற்பிக்கப்பட்டு வருகிறது. +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சிறந்த மாணவர்கள் பலரும், தமிழ் மீதான ஆர்வத்தால் இப்பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயின்று வருகின்றனர்.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் கட்டடப் பொறியியல் பயின்ற 33 மாணவர்களில் பலர், உயர்கல்விக்கும் முன்னணித் தனியார் நிறுவனப் பணிகளுக்கும் சென்றுவிட்டனர். இவர்களைத் தவிர, எஞ்சியிருந்த 7 மாணவர்கள் தங்களது முதல் முயற்சியிலேயே தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் வெற்றி பெற்று, உதவிப் பொறியாளர்களாக (Assistant Engineers) அரசுப் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.
தங்களது 23-ஆம் வயதின் தொடக்கத்திலேயே அரசு உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்கவுள்ள அந்த சாதனையாளர்களின் விவரம்:
-
தினேஷ் – நெடுஞ்சாலைத்துறை
-
அத்தீஸ்வரன் – நெடுஞ்சாலைத்துறை
-
ஜெயப்பிரியா – நெடுஞ்சாலைத்துறை
-
செண்பகம் – நீர்வளத்துறை
-
ஹரிப்பிரியா – நெடுஞ்சாலைத்துறை
-
கீர்த்தனா – ஊரக வளர்ச்சித்துறை
-
ரோகிணி – நீர்வளத்துறை
இவர்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமின்றி, தங்களது பொறியியல் படிப்பையும் முழுமையாகத் தமிழ் வழியிலேயே கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், நீர்வளத்துறையில் சாதித்துள்ள செல்வி செண்பகம், திருப்பூர் சிங்கனூர் ‘தாய்த்தமிழ் உயர்நிலைப் பள்ளி’யில் பயின்றவர் என்பது தமிழ்ப் பள்ளிகளுக்குக் கிடைத்துள்ள பெருமையாகும்.
எழும் நியாயமான கோரிக்கை: 80% இடஒதுக்கீடு சாத்தியமா?
தற்போது தமிழக அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு (PSTM) 20% மட்டுமே சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டை 80% விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள புதிய அரசு, தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், தமிழ் வழியில் பயில்வோருக்கான அரசுப் பணி இடஒதுக்கீட்டை 80 சதவீதமாக உயர்த்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தாய்மொழியில் படித்து, தொழில்நுட்பத் துறையிலும் வென்று, தமிழக அரசின் உயர் பதவிகளை அலங்கரிக்கவுள்ள அத்தனை மாணவ வெற்றியாளர்களுக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!



