“தூத்துக்குடியிலும் காவல் நிலைய மரணம்… ஆனால் முதலமைச்சரும் அமைச்சர்களும் படம் பார்க்கச் சென்றனர்!” – கனிமொழி எம்பி கடும் சாடல்!
தூத்துக்குடி: நாகர்கோவிலில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடியிலும் காவல் துறை சித்திரவதைக்கு ஆளான இளைஞர் ஒருவர் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது என்றும், காவல் துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய்யும் அமைச்சர்களும் படம் பார்க்கச் சென்றுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு ‘அரசு’ இருக்கிறதா? என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி: தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாசலம் (26) என்ற இளைஞர், டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்றதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாநகர தெற்கு காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால், காவல்துறையினர் அவரை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த காவல் மரணங்கள் – கனிமொழி கண்டனம்: சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் என்பவர் உயிரிழந்த வழக்கில், அவரது உடலில் 19 காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டு சிபி-சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் மற்றொரு காவல் நிலைய மரணம் நிகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகத் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்பி:
“நாகர்கோவிலில் நடந்ததைப் போன்றதொரு சம்பவத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடியிலும் காவல் துறை சித்திரவதைக்கு ஆளான இளைஞர் ஒருவர் உயிரிழந்த செய்தியைக் கேட்பது வேதனையளிக்கிறது.
காவல் துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சரும், பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்ப்பதற்காக விடுப்பில் சென்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒரு ‘அரசு’ இருக்கிறதா என்றே தோன்றுகிறது! நாளை பணிக்குத் திரும்பிய பிறகாவது, காவலில் நிகழ்ந்த இந்த மரணம் குறித்து அவர்கள் பேசுகிறார்களா என்று பார்ப்போம்.”
எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்



