கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்; காத்திருந்த மக்களைக் கண்டு மகிழ்ச்சி!
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு செய்தார். மழையையும் பொருட்படுத்தாமல், தன்னைக்காணக் கூடியிருந்த பொதுமக்களை நோக்கி அவர் உற்சாகமாக கையசைத்தார்.
45 MLD சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் (CMWSSB) நிர்வகிக்கப்படும், கோயம்பேட்டில் உள்ள 45 மில்லியன் லிட்டர் (MLD) திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், அதன் பகுதியாக கோயம்பேட்டில் உள்ள மூன்றாம் நிலை (tertiary) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டார். ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ (RO) தொழில்நுட்பம் சார்ந்த இந்நிலையத்தின் திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
சென்னைக்கு நீர் பாதுகாப்பு & மறுசுழற்சி
CMWSSB நிறுவனம், 438 கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நகரின் கழிவுநீரை நிர்வகித்து வருகிறது. சென்னைக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும், சுழற்சி முறை நீர் பொருளாதாரத்தை (circular water economy) செயல்படுத்தவும், கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் தலா 45 MLD திறன் கொண்ட உயர்தர சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விரு நிலையங்களும் இணைந்து நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிக்கின்றன. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை மேலும் உயர்தரத்திற்குச் சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்குத் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி
இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொழிற்சாலை பயன்பாட்டிற்காக நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை வழங்குகிறது. இதன் விளைவாக:
-
முன்பு தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட குடிநீர், தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யத் திருப்பி விடப்படுகிறது.
-
நிலத்தடி நீர் எடுப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
-
கட்டுமானம், ரெடி-மிக்ஸ் கான்கிரீட் (RMC) போன்ற துறைகளில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆய்வின்போது அரசுத் தலைமை கொறடா ஆர். சபரிநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி (IAS) மற்றும் CMWSSB மேலாண்மை இயக்குநர் டி. ஆனந்த் (IAS) ஆகியோர் உடன் இருந்தனர்.
கொட்டும் மழையில் நடந்த முதல்வர்!
சுமார் ஒரு மணி நேர ஆய்வை முடித்த பிறகு, முதலமைச்சர் விஜய் அங்கிருந்து வெளியே வந்தபோது, கோயம்பேடு பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும், விஜய்யைக் காண்பதற்காகச் சாலையின் இருபுறமும் அருகிலுள்ள பாலத்தின் கீழும் திரளான பொதுமக்கள் காத்திருந்தனர்.
பொதுமக்களின் உற்சாகத்தைக் கண்ட முதலமைச்சர், தனது காரில் இருந்து இறங்கி குடை பிடித்தவாறே சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து சென்று அவர்களைச் சந்தித்தார். முதலமைச்சரைக் கண்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள் முழக்கமிட்ட நிலையில், அவர் புன்னகைத்தபடியே அவர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.



