திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவர்கள், பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்துக்கு அருகிலுள்ள கிராமத்தில் தங்கி கிராம வாழ்வியல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, C.N. பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒழுக்க விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கைபேசி பயன்பாட்டின் நன்மை–தீமைகள், 12ஆம் வகுப்பிற்குப் பிறகான கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளை வேளாண் மாணவர்கள் ரிதோஷ், சம்பத், சரவணன், சத்யராஜ், செல்வகுமார், சுபம், சிவராஜ், சந்தோஷ், சோம்தத், ஸ்ரீகாந்த், சீனிவாசன், சுயாஷ் ஆகியோர் முன்னெடுத்தனர்.
பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் விஜய் செல்வராஜ், கமலக்கண்ணன், அறிவிக்கரசு ஆகியோரின் வழிகாட்டுதலுடனும், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் அனுமதியுடனும் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பலா மற்றும் தேங்காய் கன்றுகளை நட்டனர்.
மேலும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பலர் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயனடைந்தனர். போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சித் திட்டம் மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு உணர்வையும், கிராம மக்களிடையே கல்வி மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதாக அமைந்தது.



