60 கி.மீ வேகத்தில் சென்ற கார்! ஜன்னலில் தொங்கியபடி திருமாவளவனுடன் பேச்சு: வைரலாகும் விசிக நிர்வாகியின் ஆபத்தான வீடியோ!
கடலூர்: வேகமாகச் சென்று கொண்டிருந்த காரின் ஜன்னல் கதவைப் பிடித்தபடி, விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம் கட்சி நிர்வாகி ஒருவர் ஆபத்தான முறையில் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பவம் நடந்தது என்ன? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) தலைவர் தொல். திருமாவளவன் கடலூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றிருந்தார். உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள விசிக மாநாடு தொடர்பான ஆலோசனைகளுக்காக அவர் சென்றபோது, உண்ணாமலைச்செட்டி சாவடி அருகே தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, காரின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த திருமாவளவனிடம் கடலூர் நகர விசிக துணைச் செயலாளர் பாரதன் என்பவர் பேசத் தொடங்கினார். பேசிக் கொண்டிருக்கும் போதே கார் நகரத் தொடங்கிய நிலையிலும், அவர் காரின் கதவு ஜன்னலைப் பிடித்தபடியே தொடர்ந்து பேசினார்.
உடனடி நடவடிக்கை: சுமார் 60 கி.மீ வேகத்தில் கார் நகர்ந்த போதும், ஆபத்தை உணராமல் அவர் தொங்கியபடியே சென்றதைக் கவனித்த திருமாவளவன், உடனடியாக ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். கார் நின்றதும் அந்த நிர்வாகி பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டார்.
இந்த ஆபத்தான பயணத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், “கட்சிப் பற்று இருந்தாலும், நகரும் வாகனத்தில் இப்படி ஆபத்தான முறையில் பயணிப்பது தவறு” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
