Friday, October 16, 2026
Homeசெய்திகள்பர்கூர் அருகே விஜயநகர பேரரசு கால அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு! தமிழக வரலாற்றில் முதன்முறை செய்தி...

பர்கூர் அருகே விஜயநகர பேரரசு கால அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு! தமிழக வரலாற்றில் முதன்முறை செய்தி அம்சம்!

பர்கூர் அருகே விஜயநகர பேரரசு கால அரிய கல்வெட்டு கண்டுபிடிப்பு! தமிழக வரலாற்றில் முதன்முறை செய்தி அம்சம்!

 

பர்கூர் / கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த குட்லட்டி கிராமத்தில் விஜயநகரப் பேரரசர் காலத்தைச் சேர்ந்த 600 ஆண்டுகள் பழமையான அரிய ஏரிக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய வரலாற்று ஆய்வில் இக்கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீகோபால கிருஷ்ணர் கோவிலும் அரிய கல்வெட்டும்

குட்லட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீகோபால கிருஷ்ணர் கோயில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய மத்வ பிருந்தாவனமாக இருந்துள்ளது. அந்த பழமையான அடையாளத்தைப் பாதுகாத்துத் தற்போது கிருஷ்ணன் கோயிலாக மாற்றியுள்ளனர்.

அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் அளித்த தகவலின் பேரில், கோயில் அருகே உள்ள வரதப்பன் என்பவரது நிலத்தில் அமைந்திருந்த கல்வெட்டை வரலாற்று ஆய்வாளர்கள் படித்து ஆய்வு செய்தனர்.

வரலாற்று தகவல்களும் கொடை செய்திகளும்

இக்கல்வெட்டு குறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனச் செயலர் கோவிந்தராஜ் தெரிவித்த முக்கிய தகவல்கள்:

ஆட்சியாளர் விவரம்: விஜயநகரப் பேரரசர் இரண்டாம் தேவராயனின் மகன் இம்மடி புக்கராயன், ‘முள்வாய் ராஜ்யத்தின்’ ஆளுநராக இருந்தபோது கி.பி. 1393 (ஸ்ரீமுக ஆண்டு) ஆம் ஆண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

அங்கணப்பற்று பகுதி: அக்காலத்தில் மகாராஜகடை, குருவிநாயனப்பள்ளி, காரகுப்பம், மேகலசின்னம்பள்ளி, வரட்டனப்பள்ளி ஆகிய பகுதிகள் ‘அங்கணப்பற்று’ என அழைக்கப்பட்டுள்ளன.

ஏரி மற்றும் கொடை விவரம்: இப்பகுதியை நாயக்கம் செய்துவந்த மாமிண்டர் கேசையப்பாவை, ஈராண்டை என்பவரது மகன் வையணந்தார் என்பவர் ஏரி ஒன்றை ஏற்படுத்தி செல்லப்பிள்ளையார் கோயிலைக் கட்டியுள்ளார்.

தானமாக வழங்கப்பட்டவை: அக்கோயிலுக்காக 5 குளகம் விதை விளை நிலக் கொல்லையையும், 6 குளகம் விதை விளை நிலக் கழனியையும், எண்ணை ஆட்டும் செக்கினையும் தானமாக வழங்கியுள்ளார்.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற சொல்

சாற்றை ஏரி: இக்கல்வெட்டில் “சாற்றை ஏரி” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏரியின் ஒரு பகுதியில் சேறு மற்றும் மூங்கிலைப் பயன்படுத்தித் தடுப்பணை அமைத்து மீன் பிடிக்கும் முறையைக் குறிக்கும் இச்சொல், தமிழகத்திலேயே முதன்முறையாக இக்கல்வெட்டில்தான் இடம்பெற்றுள்ளது.

முக்கை செக்கு: எண்ணை ஆட்டும் செக்கினை இக்கல்வெட்டு “முக்கை செக்கு” எனக் குறிப்பிடுகிறது. வழக்கமான இரண்டு கம்புகளுடன், எண்ணை ஆட்டுபவர் உட்காருவதற்குப் பிரத்யேகப் பலகை அமைக்கப்பட்ட செக்கினை இது குறிக்கிறது.

ஆய்வில் பங்கேற்றவர்கள்

ஆய்வின் போது கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கச் செயலர் தமிழ்செல்வன், துணைச் செயலர் பாலாஜி, சரவணகுமார், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர். இங்கு இருந்த பழமையான பிள்ளையார் கற்சிற்பம் தற்போது சாலை அருகே உள்ள புதிய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments