“கரூரில் 10 ரூபாய்னு பாட்டுப் பாடினாங்களே, இப்ப என்ன பாடப் போறாங்க?” — முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கேள்வி!
சென்னை:
தவேகா ஆட்சியில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு கூடுதல் தொகையாக ₹20 முதல் ₹30 வரை வசூலிக்கப்படுவதாகத் துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளதாகக் சாடியுள்ள முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த அபத்தமான ஆட்சி இன்னும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவேகா அரசின் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
💣 செய்தியாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி பேசியதன் முக்கிய அம்சங்கள்:
-
பாட்டிலுக்கு ₹30 கூடுதல் வசூல்: “முந்தைய ஆட்சியில் கரூருக்கு வந்து ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பாட்டுப் பாடினார்கள். ஆனால், இப்போது தவேகா ஆட்சியில் குவார்ட்டருக்கு ₹20 முதல் ₹30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதை நான் சொல்லவில்லை, அந்தத் துறை அமைச்சரே செய்தியாளர்கள் சந்திப்பில் பல ஆண்டுகளாக நடப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். கரூரில் பாட்டுப் பாடியவர்கள் இப்போது இந்த கூடுதல் வசூலுக்கு என்ன பாட்டுப் பாடப் போகிறார்கள்?”
-
சினிமா வசன அரசியல்: “உண்மையை அறிந்து பேசாமல், யாரோ எழுதிய திரைக்கதையைப் படித்துவிட்டுச் சினிமா வசனம் பேசுபவர்களை நேர்மையான அரசியல் தலைவராகக் கருத முடியாது.”
-
தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும்: “அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். ஆனால், தவேகாவின் இந்த அபத்தமான நிர்வாகம் இன்னும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும்.”
-
பொய்யான தேர்தல் வாக்குறுதிகள்: “ஆட்சிக்கு வந்த அடுத்த கணமே நிறைவேற்றுவோம் என்று கூறிய தேர்தல் வாக்குறுதிகளில் எதை தவேகா அரசு நிறைவேற்றியுள்ளது? 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் கொடுத்தார்களா? விவசாயக் கடன்களை ரத்து செய்தார்களா? முதியோர் உதவித்தொகை கூட உரிய தேதியில் மக்களுக்குச் சென்று சேருவதில்லை. மக்களுக்குச் சேவை செய்ய இந்த அரசுக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை. இது வெறும் பெயரளவிலான அரசாங்கம் மட்டுமே” எனச் செந்தில் பாலாஜி கடுமையாகச் சாடியுள்ளார்.
