டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கை! DVAC அதிரடி எஃப்.ஐ.ஆர்!
சென்னை: டாஸ்மாக் (TASMAC) நிர்வாகத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளது.

41 இடங்களில் அதிரடி சோதனை:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள், டாஸ்மாக் ஒப்பந்தங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
முதல் தகவல் அறிக்கையில் (FIR) இடம் பெற்றுள்ள 7 பேர்:
-
செந்தில் பாலாஜி (முன்னாள் அமைச்சர் – A1)
-
எஸ். விசாகன், IAS (டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநர் – A2)
-
ராமதுரை முருகன் (டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர்)
-
பன்னீர்செல்வம் (டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர்)
-
பாஸ்கர் (செந்தில் பாலாஜியின் உதவியாளர்)
-
ரதீஷ் ராஜ்
-
மூலனூர் கார்த்தி
முறைகேட்டின் முக்கிய அம்சங்கள் (DVAC அறிக்கை):
-
டெண்டர் முறைகேடுகள்: கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பார் டெண்டர் ஒதுக்கீட்டில் பெரும் விதியை மீறி அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
-
கோடிகளில் இழப்பு: இதன் மூலம் அரசுக்குக் கோவை வடக்கில் ₹17.27 கோடி, கோவை தெற்கில் ₹13.58 கோடி மற்றும் நீலகிரியில் ₹1.95 கோடி வரை நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
கூடுதல் கட்டண வசூல் (MRP Violations): 2021 முதல் 2025 வரை உள்ள காலகட்டத்தில், வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிகபட்ச விற்பனை விலையை (MRP) விட ₹500 வரையிலும், பிற மதுபானங்களுக்கு ₹10 முதல் ₹100 வரையிலும் சட்டவிரோதமாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் டெண்டர் நடைமுறை முறைகேடு, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் லஞ்சப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக மதுபான ஆலைகள், பீர் நிறுவனங்கள், போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் பலரையும் இணைத்து DVAC வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.



