கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையம் முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகள் மீது கனிம லாரி மோதிய கோர விபத்தில் மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் கொதித்தெழுந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

சம்பவ இடத்தில் உருக்கமான பேச்சு:

விபத்து நடந்தவுடன் மக்கள் சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.பி. ஸ்டாலின், மக்களிடம் அதிகாரக் குரலில் பேசாமல், அவர்களில் ஒருவனாக நின்று உரையாடினார்.

“நான் பாதிக்கப்பட்டவருடன் நிற்கிறேன். உயிரை இழந்த ஒருவரின் வலியையும், அந்தப் பொருளாதார நெருக்கடியையும் நான் அறிவேன். இனி ஒரு உயிர் கூடப் போகக் கூடாது. கனிம லாரிகளைத் தடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என அவர் உறுதியளித்தார். அவரது நேர்மையான பேச்சு போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தியது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை:

சொன்னதைச் செய்துகாட்டும் விதமாக, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கக்கூடிய கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தார் எஸ்.பி.

மாறிய சாலைகளின் தோற்றம்:

எஸ்.பி-யின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கனிம லாரிகள் நுழைவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. அதிவேகமாகச் சென்று மக்களை அச்சுறுத்தி வந்த கனிம லாரிகள் நேற்று ஒரு இடத்தில்கூடக் காணப்படவில்லை. புழுதி படிந்திருந்த சாலைகள் இப்போது அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மாறியுள்ளன.

நேற்று மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை இன்று செயலில் காட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்களைக் குமரி மாவட்ட மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டித் தீர்த்து வருகின்றனர்

மக்களின் குரலாக ஒலிக்கும் எங்களது செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள RedNewsTamil யூடியூப் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! 🔔